ஆன்லைன் மூலம் பான் கார்டில் புதிய தகவல்கள் சேர்ப்பதாக கூறி பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.1½ லட்சம் மோசடி
ஆன்லைன் மூலம் பான் கார்டில் புதிய தகவல்கள் சேர்ப்பதாக கூறி பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.1½ லட்சம் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு பெரியார்நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஷ். இவருடைய மனைவி பீனா (வயது 46). இவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதை பீனா வாசித்து பார்த்தார். அப்போது அதில் பான் கார்டில் புதிய தகவல்களை சேர்க்க வேண்டும் என்றும், அதற்காக அனுப்பப்பட்டு உள்ள லிங்கில் சென்று கேட்கும் விவரங்களை குறிப்பிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த லிங்கை தொட்டவுடன் ஒரு இணையதள திரை திறக்கப்பட்டது. அதில் வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்பட்டன. பீனாவும் கேட்கப்பட்ட விவரங்களை உள்ளீடு செய்து உள்ளார்.
இதையடுத்து செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. எண் அடங்கிய குறுஞ்செய்தி வந்தது. அந்த ஓ.டி.பி. எண்ணையும் அவர் செலுத்தி உள்ளார். இதையடுத்து சிறிது நேரத்தில் பீனாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 920 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதைப்பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் சேமிப்பு கணக்கு வைத்து உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டு உள்ளார். அப்போதுதான் ஆன்லைன் மோசடி கும்பலிடம் தான் ஏமாற்றப்பட்டதை பீனா உணர்ந்தார்.
இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் பீனா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story