மனநலம் பாதித்த பெண் பலாத்கார வழக்கில்... ஓட்டல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
மனநலம் பாதித்த பெண் பலாத்கார வழக்கில் ஓட்டல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மதுரை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சின்ன மூலக்கரையை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 34). இவர் கடந்த 2015-ம் ஆண்டில் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அந்த சமயத்தில் ஒரு நாள் மதுரை ரெயில் நிலையத்திற்கு அவர் வந்தார். அப்போது அங்கு தென்காசியை சேர்ந்த தாயாரும், மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் இருந்தனர்.
அவர்கள் மதுரையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு, ஊருக்கு திரும்புவதற்காக ரெயில் நிலையத்தில் இருந்ததை பாலமுருகன் தெரிந்து கொண்டார். பின்னர் அவர்களுடன் பேசி, அந்த இளம் பெண்ணை அழைத்து சென்று சாப்பாடு வாங்கித்தருவதாக பெண்ணின் தாயாரிடம் கூறினார். அவரை நம்பி பெண்ணை அனுப்பி வைத்தார்.
அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலமுருகன் பலாத்காரம் செய்தார். பின்னர் அவரது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு தப்பினார். ரெயிலில் ஊருக்கு செல்லும்போது மனநலம் குன்றிய இளம் பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் விசாரணையில் பலாத்கார சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து பெண்ணின் தாயார் அளித்த புகாரின்பேரில், மதுரை திலகர்திடல் போலீசார் வழக்குபதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் லதா சாந்தி ஆஜரானார். விசாரணை முடிவில், பாலமுருகன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story