வகுப்பறையில் குளிர்பானத்தில் மதுவை கலந்து குடித்த கல்லூரி மாணவிகள்...!


வகுப்பறையில் குளிர்பானத்தில் மதுவை கலந்து குடித்த கல்லூரி மாணவிகள்...!
x
தினத்தந்தி 7 April 2022 5:26 PM IST (Updated: 7 April 2022 5:26 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரத்தில் வகுப்பறையில் அமர்ந்து கல்லூரி மாணவிகள் குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து குடித்தனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு பகுதியிலிருந்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறையில் உள்ள மேஜை மேல் அமர்ந்துகொண்டு வெளிமாநில பாக்கெட் மதுபானத்தை குளிர்பானத்தில் கலந்து அருந்தியுள்ளனர். இதனை மாணவிகள் தங்களது மொபைல்களில் வீடியோவும் எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த வீடியோ சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் கவனத்திற்கு சென்றுள்ளது. இதை தொடர்ந்து, கல்லூரி மாணவிகளிடன் விசாரணை செய்ததில், அதே வகுப்பறையில் மாணவிகளுடன் படிக்கும் மாணவன் ஒருவன் மதுபானத்தை வாங்கி வந்ததாகவும், மது என்று தெரிந்தே அருந்தியதாகவும் மாணவிகள் ஒப்புக்கொண்டனர்.

இதை தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் தற்காலிக இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து இனி இது போல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் எச்சரித்து அனுப்பியுள்ளார்.

Next Story