அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைக்க 40 மீட்டர் ஆழத்தில் மண் பரிசோதனை


அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைக்க 40 மீட்டர் ஆழத்தில் மண் பரிசோதனை
x
தினத்தந்தி 8 April 2022 12:31 AM IST (Updated: 8 April 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைப்பதற்காக மிதவை படகுகளில் எந்திரங்களை பொருத்தி ஆற்றின் நடுவே 40 மீட்டர் ஆழத்தில் மண்பரிசோதனை செய்யும் பணி அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை,

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தத் திட்டத்தில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கூவத்தை போன்று அடையாறு

இந்த வழித்தடங்களில் 128 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வழித்தடத்தில் 30 ரெயில் நிலையங்களும் மாதவரம்- சோழிங்கநல்லூர் இடையே 48 ரெயில் நிலையங்களும், மாதவரம்- சிறுசேரி சிப்காட் இடையே 50 ரெயில் நிலையங்களும் அமைய உள்ளன.

இந்த திட்டப்பணிகளை நிறைவேற்ற கட்டுமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மாதவரம் முதல்-சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளில் பசுமைவழிச்சாலையில் உள்ள பூங்காவில் மெட்ரோ ரெயிலுக்கான சுரங்க ரெயில் நிலையம் அமைப்பதற்கான மதில் சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப்பணி முடிவடைந்ததும் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் (டணல் போரிங் எந்திரம்) பசுமைவழிச் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு பணிமனை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையம் அருகில் கூவத்தின் கீழ் சுரங்க ரெயில் நிலையம் அமைத்தது போன்று அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது.

ரெயில் நிலைய சுற்றுச்சுவர்

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

பசுமை வழிச்சாலையில் உள்ள பூங்காவில் அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் நிலையம் அமைக்கும் பணிக்காக 200 மீட்டர் நீளத்திற்கு ரெயில் நிலைய சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. மீதம் உள்ள சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்த பணிகள் நிறைவடைந்த உடன் வருகிற ஆகஸ்டு மாதம் சுரங்கம் தோண்டும் எந்திரம் கொண்டு வரப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கும். பசுமை வழிச்சாலையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் இந்த பாதையில் அடையாறு ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

அடையாறு ஆற்றில் மண் பரிசோதனை

இதற்காக அடையாறு ஆற்றில் மண்பரிசோதனை செய்யப்பட உள்ளது. ஆனால் தற்போது அடையாறு ஆற்றில் 6 மீட்டர் தண்ணீர் இருப்பதால் அதற்கு கீழ் உள்ள மண்பரிசோதனை செய்ய வேண்டி இருக்கிறது. இதற்காக பத்துக்கு பத்து மீட்டர் மற்றும் ஆறுக்கு ஆறு மீட்டர் என்ற அளவுகளில் 2 மிதவை படகுகள் வடிவமைக்கப்பட்டு அவற்றில் எந்திரங்கள் பொருத்தி அடையாறு ஆற்றில் மண்பரிசோதனை செய்யப்பட உள்ளது.

ஆற்றில் 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண்பரிசோதனை செய்யப்பட உள்ளது. மண்பரிசோதனை மூலம் சுரங்கத்தின் உறுதி தன்மை தெரியவரும். இந்த பணிகள் 2 அல்லது 3 மாதங்கள் வரை நடக்கலாம். அதற்கு பிறகு சுரங்கம் தோண்டும் எந்திரங்களும் வந்துவிடும். அதற்கு பிறகு பணிகள் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story