சென்னையில் இருந்து ஹஜ் பயணம்: தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 8 April 2022 1:53 PM IST (Updated: 8 April 2022 1:53 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலமாக அறிவிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக சென்னை, கொச்சி, ஐதராபாத் உள்ளிட்ட 21 இடங்கள் புறப்பாட்டு தலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. 

21 புறப்பாட்டு தலங்களை 10 ஆக குறைத்து இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. இதில் சென்னை நீக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையை மீண்டும் ஹஜ் பயணத்திற்கான புறப்பாட்டு தலங்கள் பட்டியலில் சேர்க்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமானில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கொச்சிக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இது புனித பயணம் மேற்கொள்வோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 34 ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் ஹஜ் பயணத்திற்கான புறப்பாட்டு தலமாக இருந்து வந்தது. 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பயணிகள் சென்னையில் இருந்து புனித பயணம் மேற்கொண்டு வந்தனர் என்று கூறப்பட்டது.

அப்போது ஹஜ் கமிட்டி தரப்பில், சென்னை விமான நிலையத்தையும் புறப்பாட்டு தலமாக அறிவிக்க கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதை ஹஜ் கமிட்டி பரிசீலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கும்படி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story