பட்டாசு வெடித்து சிதறியதில் சிறுவர்கள் உள்பட 5 பேர் படுகாயம்
புதுவை அருகே கோவில் திருவிழாவில் நடந்த வாணவேடிக்கையில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
புதுவை அருகே கோவில் திருவிழாவில் நடந்த வாணவேடிக்கையில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
மயான கொள்ளை விழா
புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான பெரிய இருசாம்பாளையத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மயான கொள்ளை விழா நடைபெற்று வருகிறது.
விழாவில் அம்மன் முத்துபல்லக்கில் வீதி உலா செல்ல தயார் நிலையில் இருந்தது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. இதற்காக அங்கு சாக்கு மூட்டை ஒன்றில் பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தது.
சிறுவர்கள் உள்பட 5 பேர் காயம்
இந்த வாணவேடிக்கையை கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். அப்போது வானில் வெடித்து சிதறிய பட்டாசில் இருந்து பறந்த தீப்பொறி, மூட்டையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் விழுந்தது. இதில் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. இதனை கண்டவுடன் அங்கிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
இந்த பட்டாசு விபத்தில் சிலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் அரியாங்குப்பத்தை சேர்ந்த லட்சுமி நாராயணன் (வயது 16), முதலியார்பேட்டைய சேர்ந்த சிறுவர்கள் மாதவன் (9), அர்ஜூனன் (8), சரத் (32), சக்திவேல் (31) ஆகியோர் படுகாயமடைந்தனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
போலீசார் விசாரணை
விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி அறிந்தவுடன் ரெட்டிச்சாவடி மற்றும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
கோவில் திருவிழாவில் பட்டாசு வெடி விபத்தில் 5 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story