மயில் சிலை கண்டெடுக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது அமைச்சர் சேகர்பாபு தகவல்


மயில் சிலை கண்டெடுக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 9 April 2022 2:27 AM IST (Updated: 9 April 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் காணாமல் போன மயில் சிலை கண்டெடுக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என அமைச்சர் சேகர் பாபு பேசினார்.

சென்னை,

சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவில் திருமண மண்டபத்தில், குளிர்சாதன வசதி மற்றும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு வாரந்தோறும் 150-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு திருப்பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோவிலில் (சக்தி விநாயகர்) ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபத்தில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல் ஆணையர் பொது நல நிதியில் இருந்து ரூ.58.39 லட்சம் மற்றும் உபயதாரர் நிதியில் இருந்து ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் கோவில் ராஜகோபுரம், மகா மண்டபம், நவகிரகம், ஆஞ்சநேயர் சன்னதி, உற்சவ மண்டபங்கள் போன்ற கட்டிடப்பணிகள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.

பழமையான கோவில்களில் திருப்பணி

தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களில் 507-க்கும் மேற்பட்ட கோவில் களில் திருப்பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு ரூ.664 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப் பட்டு உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் களுக்கு தொல்லியல் துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பழமை மாறாமல் குடமுழுக்கு பணிகள் மேற்கொள்ளப்படும். 100-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது.

ரூ.24 லட்சம் வட்டி

கோவில் தங்க நகைகளை உருக்கி சொக்கத்தங்கமாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 27,236.600 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி செல்வி ஆர்.மாலா முன்னிலையில் பிரித்தெடுக்கப்பட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின், சாத்தூர் கிளை முதன்மை மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மும்பையில் உள்ள தங்க உருக்காலையில் தங்க பிஸ்கட்டுகளாக மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டிற்கு ரூ.24 லட்சம் வட்டி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்படி நடவடிக்கை

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் காணாமல் போன மயில் சிலை கண்டெடுக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது சட்டத்தின் ஆட்சி. எனவே, இவ்விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story