780 வங்கிகளில் ரூ.482 கோடி முறைகேடு: கூட்டுறவு வங்கி முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு


780 வங்கிகளில் ரூ.482 கோடி முறைகேடு: கூட்டுறவு வங்கி முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு
x
தினத்தந்தி 8 April 2022 11:18 PM GMT (Updated: 8 April 2022 11:18 PM GMT)

கூட்டுறவு வங்கி முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜூ (மதுரை மேற்கு தொகுதி) பேசினார். அப்போது, கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய நகைக்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாதது பற்றி குறிப்பிட்டார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

ரூ.482 கோடி முறைகேடு

அமைச்சர் ஐ.பெரியசாமி:- கடந்த 10 ஆண்டுகாலமாக 780 கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற ரூ.482 கோடி முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இன்னும் 51 வழக்குகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு இருப்பதுபோல், கூட்டுறவு சங்க முறைகேடுகளையும் விசாரிக்க முதல்-அமைச்சருடன் கலந்துபேசி சிறப்பு கோர்ட்டு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒருவர் பெயரில் ரூ.14 கோடி கடன்

உறுப்பினர் செல்லூர் ராஜூ:- எங்கள் ஆட்சிக்காலத்திலும் தவறு நடந்திருக்கலாம். உங்கள் ஆட்சிக்காலத்திலும் தவறு நடந்திருக்கலாம்.

அமைச்சர் ஐ.பெரியசாமி:- உங்கள் ஆட்சியில் நடந்த தவறுக்கு ஒரு எடுத்துக்காட்டை சொல்கிறேன். சூலூர் வட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி ஒன்றில் தனது மனைவி பெயரில் ஒருவர் ரூ.14 கோடி கடன் பெற்றுள்ளார்.

தவறு செய்தால் நடவடிக்கை எடுங்கள்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- அ.தி.மு.க. ஆட்சியில், தவறு நடந்தது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அமைச்சர் ஐ.பெரியசாமி:- தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 481 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், 4-ல் ஒரு பங்கு சங்கங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

உறுப்பினர் செல்லூர் ராஜூ:- யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள். மகளிர் சுயஉதவி குழு கடன் தள்ளுபடியில் முறைகேடு நடைபெற்றுள்ளது. திட்டத்தை முறையாக பெற முடியாத சூழ்நிலை இருக்கிறது.

குழப்பம் எதுவும் இல்லை

அமைச்சர் ஐ.பெரியசாமி:- மகளிர் சுயஉதவி குழுவில் குழப்பம் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 16 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களின் ரூ.2 ஆயிரத்து 785 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேற்கொண்டும் ஆய்வு செய்து வழங்குவோம்.

உறுப்பினர் செல்லூர் ராஜூ:- பொது நகைக்கடன் பெற்ற சுமார் 48 லட்சம் பயனாளிகளில், சுமார் 13 லட்சம் பேரே கடன் தள்ளுபடிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதில், 12 லட்சம் பேரின் கடன்கள்தான் இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ரூ.4,816 கோடி கடன் தள்ளுபடி

அமைச்சர் ஐ.பெரியசாமி:- ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கான கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தோம். தணிக்கை செய்து பார்த்ததில் 22 லட்சம் பேர்தான் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். 12 லட்சத்து 14 ஆயிரம் பேர் வாங்கிய ரூ.4 ஆயிரத்து 816 கோடி கடன்கள் 4 நாட்களில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இன்னும் 37 ஆயிரம் பேருக்கு ரூ.96 கோடிதான் கொடுக்க வேண்டியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 4 ஆயிரத்து 481 கூட்டுறவு சங்கங்களில் ஆயிரத்து 717 சங்கங்கள்தான் லாபத்தில் இயங்குகின்றன. மீதமுள்ள சங்கங்கள் நஷ்டத்திலேயே இயங்குகின்றன. முதல்-அமைச்சர் இந்த துறைக்கு ரூ.7 ஆயிரத்து 600 கோடி கொடுத்துள்ளார். கூட்டுறவுத்துறை இனிமேல் சிறப்பாக நடக்கும்.

நிபந்தனை விதிக்கக்கூடாது

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:- உறுப்பினர் மீண்டும் கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி குறித்து பேசினால், நானும் சில விளக்கங்களை சொல்ல வேண்டியிருக்கும்.

சபாநாயகர் மு.அப்பாவு:- நீங்கள் 2 பேரும் ஒரே மாவட்டத்தை (மதுரை) சேர்ந்தவர்கள். அதனால் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக்கொள்ளுங்கள்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- கேள்வி கேட்பது உறுப்பினர்களின் கடமை. அதற்கு பதில் சொல்வது அமைச்சரின் கடமை. ஆனால் நிபந்தனை விதிக்கக்கூடாது. இது ஜனநாயக நாடு.

விவசாயிகளுக்கு சென்றால் மகிழ்ச்சி

உறுப்பினர் செல்லூர் ராஜூ:- இனி நான் உணவுத்துறையில் பேசுகிறேன். பொங்கலுக்கு வழங்கப்பட்ட 21 பொருட்கள் தரமானதாக இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கரும்பு ரூ.21-க்கு வாங்கப்பட்டது. இப்போது ரூ.33-க்கு வாங்கப்பட்டுள்ளது. ரூ.12 அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. அது விவசாயிகளுக்கு சென்றிருந்தால் மகிழ்ச்சி.

அமைச்சர் ஐ.பெரியசாமி:- கரும்பின் விலையில் ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, போக்குவரத்து செலவு ஆகிய அனைத்தும் அடங்கும். மொத்தம் 28 ஆயிரம் லோடு கரும்பு வாங்கப்பட்டது. வேண்டுமென்றே பழிபோட முயற்சிக்க வேண்டாம். அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கரும்பு ரூ.30-க்கு வாங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு முழம் நீளத்துக்குத்தான் கரும்பு வழங்கப்பட்டது.

2 இடத்தில் மட்டுமே தவறு நடந்தது

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி:- பொங்கல் பரிசு தொகுப்பு தரமில்லை என்று உறுப்பினர் கூறுகிறார். எந்த அடிப்படையில் அவர் இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. 4 ஆயிரத்து 818 கூட்டுறவு சங்கங்களில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்தான் தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள்தான் இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்கிவிட்டார்கள்.

2 இடத்தில்தான் தவறு நடந்தது. அந்த இடத்தில் உள்ள 2 அதிகாரிகளும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2 டன் வெல்லத்தை வினியோகிக்க தடை

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- பல இடங்களில் தவறு நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த 2 டன் வெல்லத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், தரமில்லை என்று கூறி அதை வினியோகிக்க தடை விதித்தார்.

அமைச்சர் எ.வ.வேலு:- எதிர்க்கட்சி தலைவரும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். வெல்லம் காய்ச்சும்போது சற்று பதம் குறைந்தாலே அதில் கசிவு ஏற்படும். காற்றோட்டம் இல்லாத குடோன்களில் வைக்கும்போது கசிவு ஏற்படலாம்.

(விவாதம் இவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்தபோது, அமைச்சர் ஐ.பெரியசாமி கருத்துக்கு அ.தி.மு.க. உறுப்பினர் தளவாய் சுந்தரமும், அவை முன்னவர் துரைமுருகனின் கருத்துக்கு அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நேரத்தில், தி.மு.க-அ.தி.மு.க. உறுப்பினர்கள் காரசாரமாக மோதிக்கொண்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தார்.)

Next Story