சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 25 மாவட்டங்களில் 2-ம் கட்டமாக அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்


சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 25 மாவட்டங்களில் 2-ம் கட்டமாக அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
x
தினத்தந்தி 8 April 2022 11:26 PM GMT (Updated: 8 April 2022 11:26 PM GMT)

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட கட்சியின் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட 25 மாவட்டங்களில் 2-ம் கட்டமாக அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் 11-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

அ.தி.மு.க. சட்டத்திட்ட விதிமுறைகளின்படி 3-ம் கட்டத்தில் 2-வது கட்டமாக தேனி, வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு), தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் மேற்கு,

கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, ராமநாதபுரம், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய 25 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி பகுதி நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் வருகிற 11-ந் தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். மாவட்டங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்காக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரசீது புத்தகம்

மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி நிர்வாகிகள் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான ரசீது புத்தகம், விண்ணப்ப படிவம், வெற்றி படிவம் ஆகியவற்றை தேர்தல் நடைபெறும் 2 நாட்களுக்கு முன்பாகவே தலைமை கழகத்தில் இருந்து பெற்றுச்சென்று அவற்றை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், தங்கள் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷனர்களை, தேர்தல் நடைபெறும் நாளுக்கு முதல் நாளே நேரில் வரவழைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தவேண்டும். இந்த கூட்டத்தில் தேர்தலை எவ்வாறு நடத்தவேண்டும்? என்பது குறித்து தெளிவாக விளக்கிச் சொல்லி, உரிய ஆலோசனைகளை வழங்கவேண்டும். தலைமை கழகத்தில் இருந்து பெற்றுச்செல்லும் படிவங்களை தேர்தல் கமிஷனர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். அதேபோல் கட்சியின் அமைப்பு தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் முழுமையாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story