தென்னிந்திய ஊடகம்,பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
தொழில் துறையினர் சார்பில் நடத்தப்படும் தென்னிந்திய ஊடகம், பொழுதுபோக்கு மாநாட்டை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
சென்னை நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழில் துறையினர் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். நடிகர்கள் ஜெயம் ரவி, ரமேஷ் அரவிந்த், ஜெயராம், நடிகை சுகாசினி, இயக்குனர் ராஜமவுலி, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்டோர் முதல் நாள் அமர்வில் பங்கேற்றுள்ளனர்.
2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இந்திய அளவில் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு , திரைப்படங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி , சமூக வலைதளங்கள் திரைப்படங்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் , குறைந்த பட்ஜெடில் பெருமளவில் வெளியாகும் தரமான படங்களுக்கான அங்கீகாரம் வழங்குவது எப்படி , ஒடிடி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி , பொதுமக்களை திரையரங்குகளை நோக்கி ஈர்ப்பது எப்படி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 300 பல்வேறு திரைப் பிரபலங்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
நாளை நடைபெறக்கூடிய நிகழ்வில் முன்னணி இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம், ஏ.ஆர் முருகதாஸ் ஆகியோரும், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
முதல்வராக பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆன நிலையில், தொழில்துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அடிப்படையில் துபாய், அபுதாபி சென்றுவிட்டு வந்தேன். மாநில உரிமைகளை உரிமையுடன் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் டெல்லி சென்று வந்தேன்.
பின் முதன்முறையாக கலைத்துறையினர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றேன் என்பது பெருமை. முதல்வராக வந்திருந்தாலும் ஒரு காலத்தில் திரைப்பட தயாரிப்பாளராக இருந்தவன். எனது ஒரு சில படங்களில் சில வேடங்களிலும் நடித்துள்ளேன். நாடக மேடைகளிலும் பங்கேற்றுள்ளேன். அதனால், ஆர்வத்துடன் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் கலந்துக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story