இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது..!! - ஓ.பன்னீர் செல்வம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 April 2022 1:44 PM IST (Updated: 9 April 2022 1:44 PM IST)
t-max-icont-min-icon

பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

டெல்லியில் நேற்று நாடாளுமன்றத்தின் 37வது அலுவல் மொழிக் குழுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். பல மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சரவைக்கான எழுபது விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தி மொழியில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும், மற்ற மொழிகளை பேசும் மாநில மக்கள் இந்திய மொழியில் பேச வேண்டுமென்றும், ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழுவின் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு உள் துறை அமைச்சர் அவர்கள் பேசியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இந்தி மொழி தேவை என்கிறபட்சத்தில், இந்தி மொழியை தாங்களாகவே மனமுவந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம் என்றும், அதே சமயத்தில் இந்தி திணிப்பு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறி இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூலக் காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள். 

பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது என்பதையும், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.



Next Story