வேலூரில் பரபரப்பு: அரசு பஸ் டிரைவர் மண்டையை உடைத்த இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
வேலூரில் அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் டிரைவர் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் வண்ணாங்குளம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 49). அரசு பஸ் டிரைவர். இவர் இன்று காலை அம்பத்தூரில் இருந்து வேலூர் வந்த அரசு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது வேலூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலாக இருந்ததால் டிரைவர் செல்வம் ஹாரன் அடித்துள்ளார்.
அப்போது பஸ் நிலையத்திற்கு வெளியே உள்ள ஓட்டலில் பணியில் இருந்த 2 தொழிலாளர்கள் ஹாரன் அடிக்கக் கூடாது என ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் பேருந்து நிலையத்திற்க்குள் சென்ற பஸ்சை பின் தொடர்ந்து சென்ற ஓட்டல் ஊழியர்கள் டிரைவர் செல்வத்தை சரமாரியாக தாக்கினர். இதில் சாவியை கொண்டு தாக்கியதால் செல்வத்தின் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்து மற்ற டிரைவர் கண்டக்டர்கள் அங்கு வர ஒட்டல் ஊழியர்கள் இருவரும் ஓட்டலை பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். பணியில் இருந்த பஸ் டிரைவர் தாக்கப்பட்டதை அடுத்து தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும், அதுவரை பேருந்து இயக்க மாட்டோம் என பஸ் டிரைவர் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் இருந்து எந்த ஒரு பஸ்சும் வெளியே இயக்கப்படாமல் இருந்தது.
அதே நேரத்தில் காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்களும் செல்லியம்மன் கோவில் முன்பு நிறுத்தப்பட்டது. காட்பாடியில் இருந்து வேலூருக்கு எந்தவித வாகனமும் வரமுடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாலாறு பழைய பாலத்தில் இருந்து காட்பாடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேலூர் வடக்கு மற்றும் போக்குவரத்து போலீசார் அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து அலுவலர்களும் அங்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
டிரைவர் செல்வத்தை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து தாக்கியுள்ளனர். இதனால் எங்களது உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. உடனடியாக டிரைவரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை வாகனங்களை இயக்க மாட்டோம் டிரைவர் கண்டக்டர்கள் தெரிவித்தனர்.
பஸ்நிலையத்தில் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். டிரைவரை தாக்கியவர்கள் கைது செய்யப்படுவார்கள் உடனடியாக பஸ்களை இயக்க வேண்டும் என போலீசார் உறுதி அளித்தனர். 45 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகு டிரைவர்கள் கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினர். ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதில் காயமடைந்த டிரைவர் செல்வம் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து புதிய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து சீரானது. டிரைவரை தாக்கி விட்டு தப்பி ஓடிய ஓட்டம் தொழிலாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story