வீட்டில் பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல் பெட்டிக்கடைக்காரர் கைது
வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை
திருபுவனையில் வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருபுவனை காமராஜர் நகர் வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 54). அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து அங்குள்ள கடைகளுக்கு சப்ளை செய்வதாக திருபுவனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு மற்றும் குற்றவியல் போலீசார் மாறுவேடத்தில் சென்று ஸ்ரீதரிடம் புகையிலை பொருட்களை கேட்டுள்ளனர். வந்திருப்பது போலீஸ் என தெரியாமல் ஸ்ரீதரும் வீட்டுக்குள் வைத்திருந்த புகையிலை பொருட்களை எடுத்து வந்து கொடுத்தார்.
பறிமுதல்
இதையடுத்து அவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் வீட்டில் 10 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த புகையிலை பொருட்களை ஸ்ரீதர் சென்னை, விழுப்புரம், பெங்களூரு பகுதிகளில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருடன் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story