20 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது போலீசார் அதிரடி


20 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 9 April 2022 9:50 PM IST (Updated: 9 April 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 20 கிலோ கஞ்சாவுடன் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

புதுச்சேரி
புதுச்சேரியில் 20 கிலோ கஞ்சாவுடன் 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

வாலிபர் கைது

புதுவை லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், வீரபத்திரன் மற்றும் போலீசார் கடந்த 7-ந் தேதி கஞ்சா விற்றதாக கருவடிக்குப்பம் மகாவீர் நகரை சேர்ந்த தினேஷ் என்ற வீரப்பன் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை பழங்காநத்தம் வசந்த நகரை சேர்ந்த கட்டுமான தொழிலாளி பொன்னுராஜ் (57) என்பவர் கஞ்சா சப்ளை செய்ததாக கூறினார். இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். 

விசாரணை

இந்தநிலையில் பொன்னுராஜ் புதுவைக்கு வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து புதுவைக்கு பஸ்சில் வந்த பொன்னுராஜை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்த அன்பழகன் (61), அம்மாபட்டி மொக்கராசு (66) ஆகியோர் லாஸ்பேட்டை கவிக்குயில் நகர் முத்துரங்கசெட்டி 2-வது குறுக்குத்தெருவை சேர்ந்த கென்னட் (40) என்பவரது வீட்டில் கஞ்சாவுடன் தங்கியிருப்பது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் கென்னட் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து  சோதனை நடத்தினர். அங்கு கஞ்சாவுடன் பதுங்கியிருந்த அன்பழகன், மொக்கராசு, கென்னட் ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது விசாகபட்டினத்தில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து தமிழகம், புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

கைது

அதைத்தொடர்ந்து பொன்னுராஜ் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவையும், ரூ.3 லட்சத்து 17 ஆயிரமும், 9 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கோட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா வெகுவாக பாராட்டினார்.

ரகசியம் காக்கப்படும்

இதுதொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா கூறுகையில், புதுச்சேரியில் கஞ்சாவை புழக்கத்தை ஒழிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கஞ்சா விற்பது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். தற்போது கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Next Story