கல்லூரிகளில் தேர்வுக்கட்டணம் உயர்வு: திமுக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 April 2022 11:03 AM IST (Updated: 10 April 2022 11:03 AM IST)
t-max-icont-min-icon

இனி வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களில் கட்டணம் உயராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

கல்லூரி தேர்வுக் கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ள தி.மு.க. அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முப்பது வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணங்களை எல்லாம் இரண்டு மடங்கு, மும்மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. 

கொரோனா தொற்று நோய் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூட உத்தரவிடப்பட்டது. இதன் காரணமாக, பெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததுடன், வங்கிகள் மூலமாகவும், தனியார் நிதி நிறுவனங்கள் மூலமாகவும் தனியாரிடமும் கடன் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தனர். இந்த நிலை கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நீடித்த நிலையில், கொரோனா தாக்கம் சற்று குறைந்ததையடுத்து ஓரளவு இயல்பு நிலை திரும்பி, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், அந்த கல்வியாண்டிற்கான தேர்வுகள் நடத்தப்படவில்லை. 

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது அலை, மூன்றாவது அலை காரணமாக மீண்டும் பள்ளி, கல்லூரிகள் முடப்பட்டு, இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு தான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து தற்போதுதான் ஓரளவு இயல்பு நிலை திரும்பி இருக்கிறது. அனைவரும் பணிக்குச் செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை இயல்பான நிலையை அடைய மேலும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்கின்ற நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் ஏழையெளிய மாணவ், மாணவியரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டணங்கள் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகவும், சில இனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தத் தேர்வுக் கட்டண உயர்வு என்பது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்ற அச்சமும் தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தற்போது நிலவுகிறது. இந்தக் கட்டண உயர்வு குறித்து மாணவு, மாணவியர் போராட்டங்களை நடத்தியும், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. 

பழைய கட்டணத்தையே தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வசூலிக்கவும், இதர பல்கலைக்கழகங்களும் கட்டண உயர்வை அறிவிக்காமல் இருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவியர் மத்தியில் நிலவுகிறது.எனவே, முதல்-அமைச்சர் மாணவ மாணவியரின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று நோயினால் ஏற்பட்ட பாதிப்பினைக் கருத்தில் கொண்டும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து கட்டண உயர்வையும் உடனடியாக ரத்து செய்யவும், இனி வருங்காலங்களில் பிற பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

Next Story