50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்


50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
x
தினத்தந்தி 10 April 2022 8:59 PM IST (Updated: 10 April 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கோத்தகிரி:

திருச்சி, திருவரம்பூரைச் சேர்ந்த சுகுமாரன் (63), சரவணன் (54), லதா (54),லட்சுமி (44), தினேஷ் (30), 2 வயது குழந்தை மற்றும் ஒன்றரை வயது குழந்தை ஆகியோர் நேற்று வாடகைக்காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். காரை ராஜா(35) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஊட்டி மற்றும் கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டு களித்து விட்டு இன்று மாலை 4 மணிக்கு கோத்தகிரியில் இருந்து தங்களது சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

கார் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தட்டப்பள்ளம் பகுதியில் சென்றுக் கொண்டிருக்கும்போது ஒரு குறுகிய வளைவில் டிரைவர் காரைப் திருப்புவதற்காக பிரேக் போட்டுள்ளார். ஆனால் பிரேக் பிடிக்காததால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள 50 அடி பள்ளத்தில் பாய்ந்துச் சென்று தலைகீழாக கவிழ்ந்தது. 

காருக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விரைந்து சென்று காரில் காயமடைந்து இருந்த சுற்றுலாப் பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்தில் சுகுமாரன், சரவணன், தினேஷ், லதா மற்றும் டிரைவர் ராஜா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது. மற்றவர்கள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்திற்குள்ளான காருக்குள் இருந்த 3 மாதமே ஆன பச்சிளம்குழந்தை எவ்வித சிராய்ப்பு காயங்களின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. 

இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story