சிறுவன் உள்பட 3 பேர் கைது


சிறுவன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2022 10:21 PM IST (Updated: 10 April 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

புதுவை பாண்டி மெரினாவில் மருத்துவ மாணவர்களை மிரட்டி தங்க சங்கிலி, செல்போன் பறித்து சென்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவை பாண்டி மெரினாவில் மருத்துவ மாணவர்களை மிரட்டி தங்க சங்கிலி, செல்போன் பறித்து சென்ற சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மருத்துவ மாணவர்கள்
நாமக்கல் பரமத்தி ரோடு இ.பி.காலனியை சேர்ந்தவர் அஸ்வின் (வயது24). இவர் புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி நள்ளிரவு 2 மணியளவில் தனது காரில் எம்.டி. 3-ம் ஆண்டு படிக்கும் தனது நண்பர் ரங்கராமானுஜ நாயுடுவுடன் பாண்டி மெரினா பீச்சுக்கு சென்றார். அங்கு காரை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் நடந்து சென்றனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் கொண்ட கும்பல் அஸ்வின், ரங்க ராமானுஜ நாயுடு ஆகியோரை வழிமறித்து தாக்கி 1½ பவுன் தங்க சங்கிலி, விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றனர். 
இந்த சம்பவம் குறித்து அஸ்வின் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை வலைவீசி தேடி வந்தனர்.
சிறுவன் உள்பட 3 பேர் கைது
இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றினர். அந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரித்தபோது, மருத்துவ மாணவர்களிடம் நகையை பறித்தது வம்பாகீரப்பாளையம் புதுத்தெருவை சேர்ந்த குமரேஷ் (25). தேங்காய்திட்டு புதுநகரை சேர்ந்த வசந்த் (25) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கசங்கிலி, செல்போன்     பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் 3 பேரையும் கோர்ட்டில்  ஆஜர்படுத்தி குமரேஷ், வசந்த் ஆகியோரை காலாப்பட்டு சிறையிலும், 17 வயது சிறுவனை அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.

Next Story