கட்-அவுட், பேனர்களை அகற்ற வேண்டும்
புதுவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கட்-அவுட், பேனர்களை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.
புதுவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கட்-அவுட், பேனர்களை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.
கட்-அவுட், பேனர்கள்
புதுச்சேரி மாநிலத்தில் கட்-அவுட், பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசியல் கட்சி நிகழ்ச்சி, திருமண விழாக்கள், புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது நகரின் பல்வேறு இடங்களில் கட்-அவுட், பேனர்கள் வைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதனால் நகரின் அழகு கெடுகிறது என கடந்த 2000-ம் ஆண்டு புதுச்சேரி அரசு திறந்தவெளி அழகியல் சீர்கேடு தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் அரசின் உத்தரவுகள் காற்றில் பறக்க விட்டு ஆங்காங்கே கட்-அவுட், பேனர்கள் வைக்கப்படுகிறது. அதிகரித்து வரும் கட்-அவுட், பேனர் கலாசாரத்தால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கிலும், கட்-அவுட், பேனர்கள் தடுப்பு சட்டத்தை தீவிரமாக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கலெக்டர் உத்தரவு
இதனை தொடர்ந்து புதுவையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட கட்-அவுட், பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை, பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும்.
இன்று முதல்...
உழவர்கரை நகராட்சி மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) முதலும், புதுச்சேரி நகராட்சி மற்றும் மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துகளில் புதன்கிழமை முதலும் கட்-அவுட், பேனர்கள், கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்.
இந்த பணிகளில் ஈடுபடும்போது வழக்குகள் பதிவு செய்தால் அதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும். அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் கட்-அவுட், பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை அமைக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story