புத்துணர்ச்சி அளிக்க சிறப்பு நிகழ்ச்சி: உரிமையாளர்களுடன் செல்லப்பிராணிகள் உற்சாக நடைபயணம்


புத்துணர்ச்சி அளிக்க சிறப்பு நிகழ்ச்சி: உரிமையாளர்களுடன் செல்லப்பிராணிகள் உற்சாக நடைபயணம்
x
தினத்தந்தி 11 April 2022 3:20 AM IST (Updated: 11 April 2022 3:20 AM IST)
t-max-icont-min-icon

செல்லப் பிராணிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் நடத்தப்பட்ட நடைபயண நிகழ்ச்சியில் உரிமையாளர்களுடன் செல்லப்பிராணிகள் உற்சாகமாக நடந்து வந்தன.

சென்னை,

ஆறறிவு கொண்ட மனிதன், விலங்குகளிடம் இருந்து வித்தியாசப்பட்டு இருந்தாலும், முற்றிலும் விலங்குகளுடனான தொடர்பை விட்டுவிடவில்லை. துணைக்காகவும், மகிழ்ச்சிக்காவும் விலங்குகளை மனிதர்கள், தங்கள் குடும்பத்தில் ஒருத்தராக, தங்களுடனே செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள்.

அந்தவகையில் வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணிகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக, சென்னை வேப்பேரியில் உள்ள பெண்டிங்க் மேல்நிலைப் பள்ளியில், ‘‘செல்லமே செல்லம்’’ என்ற செல்லப்பிராணிகளுக்கான நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

உற்சாக நடைபயணம்

புளு கிராஸ் ஆப் இந்தியா உள்பட தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த நடைபயண நிகழ்ச்சி, வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து வகையான செல்லப்பிராணிகளும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி லாப்சோ, ஷிக்ட்சூ, லாப்ரடோர், பக் உள்ளிட்ட வகை நாய்களும், காக்கோடூ வகை கிளி உள்பட 15 செல்லப்பிராணிகள் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டன.

நடைபயணத்தை சென்னை வேப்பேரி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் எஸ்.அய்யப்பன் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். சந்திரகுப்தா, டாக்டர் தேவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வித்தியாசமான உடைகள் அணிந்து தங்கள் உரிமையாளர்களுடன் செல்லப்பிராணிகள் உற்சாகமாக அணிவகுத்து நடந்த வந்த காட்சி, அங்கிருந்தவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

பரிசுகள்

செல்லப்பிராணிகளும் தங்களது பழைய நண்பர்களை கண்ட மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து அன்பை பகிர்ந்து கொண்டன. இதனை கண்ட அங்கிருந்த பலரும், தங்களது செல்போனில் படம் பிடித்தும், செல்லப்பிராணிகளுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதையடுத்து, நடைபயணத்தில் கலந்து கொண்ட செல்லப்பிராணிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் சிறந்த உடை, சிறந்த பயிற்சி, சிறந்த பராமரிப்புகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த பரிசுகளை, மிட்டு, ஓரியோ, பெய்க்லி என்ற பெயர் கொண்ட நாய்களும், பிக்பி என்ற கிளியும் பெற்று சென்றன. தொடர்ந்து, செல்லப் பிராணியான நாயான ஓரியோவுக்கு நிகழ்ச்சியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மேலும், இந்த நிகழ்ச்சியில் செல்லப்பிராணிகளுக்கான உணவு வகைகளும், உடல் நலம் பேணுவதற்கு டாக்டர்களின் பரிந்துரை பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

Next Story