சசிகலா தொடர்ந்த வழக்கு: ஓபிஎஸ், ஈபிஎஸ் மனுக்கள் மீது இன்று தீர்ப்பு..!!
சசிகலா தொடர்ந்த வழக்கில், ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
சென்னை,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோப்புகளை சசிகலாவிடம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர். இதனையடுத்து சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்க காத்திருந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அப்போது தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார்.
அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இடையீட்டு மனு மீதான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இம்மாதம் 8ம் தேதி, தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது. ஆனால், நீதிபதி விடுப்பில் சென்றதால், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சசிகலா தொடர்ந்த வழக்கு தொடர்பாக, ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பின் முடிவு யாருக்கு சாதகமாக வந்தாலும் அதன் மூலம் அதிமுகவிலும், அரசியலிலும் பல திருப்புமுனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story