தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரளி விதையை சாப்பிட்டு மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி..!


தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரளி விதையை சாப்பிட்டு மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளி..!
x
தினத்தந்தி 11 April 2022 2:34 PM IST (Updated: 11 April 2022 2:34 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்திற்க்கு மனு கொடுக்க வந்த மாற்றுதிறனாளி அரளி விதை சாப்பிட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி,

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த கருப்பையா மகன் ராஜா (வயது 32). மாற்றுத்திறனாளி. இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க இன்று வந்தார். கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில், "எனது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். மீண்டும் என்னுடன் சேர்ந்து வாழ வருமாறு 3 முறை நேரில் சென்று அழைத்தேன். ஆனால் என்னுடன் வாழ வரவில்லை. எனவே என் மனைவியை என்னுடன் சேர்ந்து வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

பின்னர் அவர் இந்த மனு தொடர்பான விசாரணைக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவரிடம் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது ராஜா வாந்தி எடுத்தார். அது குறித்து அவரிடம் அலுவலர்கள் விசாரித்தபோது, கலெக்டர் அலுவலகத்துக்கு வரும்போதே 4 அரளி விதைகளை தின்றுவிட்டு வந்ததாக அவர் கூறினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story