பார்சல் புக்கிங் கட்டணம் 12 சதவீதம் உயர்வு..!


பார்சல் புக்கிங் கட்டணம் 12 சதவீதம் உயர்வு..!
x
தினத்தந்தி 11 April 2022 7:48 PM IST (Updated: 11 April 2022 7:48 PM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பால் பார்சல் புக்கிங் கட்டணம் 12 சதவீதம் உயர்ந்தது.

சேலம், 

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் ஒரு லிட்டர் டீசல் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இது படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.101-ஐ கடந்துவிட்டது. இதனால் ஒரே மாதத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.11 வரை உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.

ஏற்கனவே சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் உள்ள 4.5 லட்சம் லாரிகளில் சுமார் 50 சதவீத லாரிகள் இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, சேலத்தில் பார்சல் புக்கிங் கட்டணத்தை அதன் நிறுவனங்கள் 12 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு 10 கிலோ பார்சலுக்கு ரூ.150 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.170 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சேலம்-நெல்லை இடையேயான கட்டணம் கிலோவுக்கு ரூ.160-ல் இருந்து 180 ஆகவும், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கட்டணம் ரூ.240-ல் இருந்து ரூ.280 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதால் பல்வேறு தேவைகளுக்காக பார்சல் அனுப்பும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சேலம் செவ்வாய்பேட்டை லாரி புக்கிங் ஏஜெண்டுகள் கூறுகையில், லாரிகளில் டன் கணக்கில் புக்கிங் செய்யும் பொருட்களுக்கு கட்டண உயர்வு உயர்த்தப்படவில்லை. குறைந்த அளவில் பார்சல் புக்கிங் செய்பவர்களுக்கு மட்டும் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story