ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதாமலேயே சென்னை ஐ.ஐ.டி.யில் பட்டப்படிப்பு படிக்க முடியும்


ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதாமலேயே சென்னை ஐ.ஐ.டி.யில் பட்டப்படிப்பு படிக்க முடியும்
x
தினத்தந்தி 12 April 2022 12:26 AM IST (Updated: 12 April 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு எழுதாமலேயே சென்னை ஐ.ஐ.டி.யில் பி.எஸ்சி. பட்டப்படிப்பை படிக்க முடியும் என்று அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யின் கல்வியை அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கச்செய்யும் ஒரு திட்டமாக பி.எஸ்சி. தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) பட்டப்படிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னை, கோவை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், கிராமங்கள் வரை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், எந்த வயது உடையவர்களாக இருந்தாலும், மாறுபட்ட சமூக பொருளாதார பின்னணியை கொண்டவர்களும் இந்த பட்டப்படிப்பை படிக்க முடியும்.

இந்த பட்டப்படிப்பில் சேரும் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தேவையான கல்வி உதவித்தொகை மற்றும் கட்டணச் சலுகையும் சென்னை ஐ.ஐ.டி. வழங்குகிறது. ஏற்கனவே இந்த பட்டப்படிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் அதில் 150-க்கும் மேற்பட்டோர் 100 சதவீத கல்வி உதவித்தொகையையும், 120-க்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம் 50 சதவீத கட்டணச்சலுகையும் பெற்றிருக்கின்றனர்.

தகுதிப்படுத்துவதற்கு இலவச பயிற்சி

இந்த பட்டப்படிப்பு திட்டத்திற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளை தகுதிப்படுத்தும் விதமாக சென்னை ஐ.ஐ.டி.யின் பி.எஸ்சி. பட்டப்படிப்பு ஆசிரியர்கள் இலவச பயிற்சி வழங்க இருக்கிறார்கள். முதற்கட்டமாக சென்னையில் உள்ள 35 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை சந்தித்து வருகிற ஜூலை மாதம் முதல் பயிற்சியை தொடங்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

மொழியை புரிந்து கொள்வதில் எந்தவித தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக வீடியோ விரிவுரைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் ஆகியவற்றை பெறும் வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த படிப்பில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்துகொண்ட பின்னர் 12-ம் வகுப்பு முடித்த பின் இதில் சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவுத்தேர்வு எழுத தேவையில்லை

இந்த திட்டம் குறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறியதாவது:-

மிகப்பெரிய அளவில் போட்டி இருக்கக்கூடிய ஜே.இ.இ. நுழைவுத்தேர்வை எழுதாமலேயே சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் கல்வி பயில்வதை இந்த பி.எஸ்சி. பட்டப்படிப்பு திட்டம் சாத்தியமாக்கி இருக்கிறது. ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க முடியாமல் தவிக்கும் கிராமப்புற ஏழை-எளிய மாணவர்களுக்கு இந்த திட்டம் நேரடி பயனை தரும். இந்த படிப்புக்கான தகுதி தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கிலும், நாடு முழுவதும் படிப்பவர்களுக்கு ஐ.ஐ.டி.யின் தரமான கல்வியை கிடைக்க செய்ய வேண்டும் என்ற வகையிலும் சென்னை ஐ.ஐ.டி. இந்த தனித்துவமான பி.எஸ்சி. பட்டப்படிப்பை தொடங்கியது.

தரவு அறிவியல் என்பது தற்போது வளர்ந்துவரும் துறையாகும். நிறுவனங்களில் தரவு அறிவியல் துறையில் திறன்மிக்கவர்களுக்கான தேவை மிக அதிகமாகவே இருந்து வருகிறது. அந்தவகையில் இந்தப் படிப்பில் சேர்ந்து நல்ல முறையில் படிப்பை முடிககும் திறன் மிக்கவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது. அதை மாணவர்களுக்கு பெற்றுத்தரும் நோக்கில் சென்னை ஐ.ஐ.டி. இந்த முயற்சியை முன்னெடுத்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story