ஓடும் ரெயிலில் பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.டி. ஊழியர்


ஓடும் ரெயிலில் பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.டி. ஊழியர்
x
தினத்தந்தி 12 April 2022 1:41 AM IST (Updated: 12 April 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.டி. நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை,

சென்னை மேற்கு விரிவு, அண்ணா நகரை சேர்ந்த 44 வயது பெண் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 9-ந் தேதி பெங்களூருவில் நடந்த மாவட்ட நீதிபதி தேர்வுக்கு சென்றுவிட்டு, மீண்டும் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காவிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திரும்பி கொண்டிருந்தார்.

இரவு ரெயிலில் அவர் தூங்கி கொண்டிருந்தபோது அதே பெட்டியில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட வக்கீலை அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.

ஐ.டி. நிறுவன ஊழியர் கைது

ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தவுடன் அங்குள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பெண் வக்கீல் புகார் அளித்துள்ளார். சம்பவம் நடந்த இடம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் புகார் மனு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு போலீசார் அந்த வாலிபரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டம், திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த செல்வன் என்பவரின் மகன் கந்தன்(வயது 26) என்பதும், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தனை கைது செய்தனர்.

Next Story