புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம்


புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம்
x
தினத்தந்தி 12 April 2022 2:54 AM IST (Updated: 12 April 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தாம்பரம்,

தமிழகத்தின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் மாநகராட்சி புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சியின் முதல்பெண் மேயராக வசந்தகுமாரியும், துணை மேயராக கோ.காமராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் முதல் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் இளங்கோவன், மண்டலக்குழு தலைவர்கள் டி.காமராஜ், ஜோசப் அண்ணாதுரை, வே.கருணாநிதி ஜெயபிரதீப் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தீர்மானம் நிறைவேற்றம்

இந்த கூட்டத்தில் தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்திய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானத்தை துணை மேயர் கோ.காமராஜ் முன்மொழிந்தார்.

அதில் அவர் கூறுகையில்,

சிங்காரச் சென்னைக்கு தெற்கு நுழைவு வாயிலாக வந்தாரை வாழவைக்கும் தென்றலாய் திகழும் தாம்பரம், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளையும், பெருங்களத்தூர், பீரக்கங்கரணை, திருநீர்மலை, சித்தலப்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளையும் ஒருங்கிணைந்து மாநகராட்சியாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனிருந்து ஒத்துழைப்புக் கொடுத்த நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ.அன்பரசன், பாராளுமன்ற குழுத்தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறினார்.

அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு

அதைத்தொடர்ந்து 171 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவசர தீர்மானமான 17 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சிக்கு லோகோ அறிமுகம் செய்யப்பட்டு, மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. அந்த லோகோவில், இந்திய விமான படை பயிற்சி மையம், திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில், தாம்பரம் ரெயில்நிலையம், எம்.ஐ.டி.கல்லூரியின் தோற்றம் ஆகியவை அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கூட்டத்தில் கருப்புச்சட்டை அணிந்து கொண்டு அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். பின்னர், சொத்து வரி உயர்வை கண்டித்தும், தாம்பரம் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் கடைகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் தலைமையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து கோஷமிட்டபடி வெளிநடப்பு செய்தனர்.


Next Story