சசிகலாவை நீக்கியது செல்லும் என கோர்ட்டு தீர்ப்பு: அ.தி.மு.க. அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்


சசிகலாவை நீக்கியது செல்லும் என கோர்ட்டு தீர்ப்பு: அ.தி.மு.க. அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 12 April 2022 3:36 AM IST (Updated: 12 April 2022 3:36 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்த நிலையில், அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது. இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று கட்சியினர் குவிந்தனர்.

சிவில் கோர்ட்டு தீர்ப்பை கொண்டாடும் விதமாக அ.தி.மு.க.வினர் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ந்தனர். இதனால் அ.தி.மு.க. அலுவலகம் நேற்று விழாக்கோலம் பூண்டது.

மாலையில் கட்சி அலுவலகத்துக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வந்தனர். இருவரும் திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

ஆலோசனை கூட்டம்

அதனைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, பெஞ்சமின், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், எம்.எல்.ஏ.க்கள் கடம்பூர் ராஜூ, பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் உள்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடந்தது. சிவில் கோர்ட்டு தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டம் 3 மணி நேரம் நடந்தது.

ஒதுங்கி கொள்வது நல்லது

பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அனைவருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொதுக்குழு நிறைவேற்றிய இந்த தீர்மானத்தை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு, சிவில் கோர்ட்டு என எல்லா இடங்களுக்கும் சென்று சசிகலா தோல்வி அடைந்து விட்டார்.

எனவே இனி அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி கொள்வது நல்லது. இதற்கு மேலும் அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல, வீணாகவே முடியும்.

பா.ஜ.க.வை சார்ந்து அ.தி.மு.க. இல்லை

இந்த தீர்ப்பால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்த கட்சிக்கும் சசிகலாவுக்கும் சம்பந்தம் இல்லை.

அதேபோல பா.ஜ.க.வை சார்ந்து அ.தி.மு.க. இல்லை. பா.ஜ.க.வின் சித்தாந்தம் வேறு. அ.தி.மு.க.வின் சித்தாந்தம், கொள்கை என்பது வேறு. யாரும், யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது.

எத்தனை மொழிகள் வந்தாலும் செம்மொழிக்கு உள்ள சிறப்பு அளப்பரியது. அந்த மொழி பொதுமொழியாக அறிவிக்கப்பட்டால் உலக தமிழர்களுக்கு அது பொன்னாள் ஆகும். அந்த நாள் நிச்சயம் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story