தமிழகத்தில் ரூ.18 கோடியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி கட்டிடங்கள்


தமிழகத்தில் ரூ.18 கோடியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி கட்டிடங்கள்
x
தினத்தந்தி 12 April 2022 5:29 AM IST (Updated: 12 April 2022 5:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ரூ.18 கோடியில் ஆதிதிராவிடர்-பழங்குடியினர் பள்ளி கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல், வீட்டுமனை பட்டா வழங்குதல், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்,

மானியத்துடன் கூடிய கடனுதவி, இளைஞர்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் செயலாக்கத்தை கண்காணித்திட முதல்-அமைச்சர் தலைமையில் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

புதிய கட்டிடங்கள் திறப்பு

அதன்படி. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நாகையில் ரூ.1 கோடியே 32 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி, செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் ரூ.1 கோடியே 11 லட்சத்திலும், நாகை திருமருகலில் ரூ.1 கோடியே 32 லட்சத்திலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 3 ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதிகள்;

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் ரூ.2 கோடியே 80 லட்சத்திலும், நாகல்கேணியில் ரூ.2 கோடியே 44 லட்சத்திலும், நாமக்கல் மாவட்டம் களங்காணியில் ரூ.2 கோடியே 20 லட்சத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் காட்டுபரமக்குடியில் ரூ.1 கோடியே 1 லட்சத்திலும் கட்டப்பட்டுள்ள 4 ஆதிதிராவிடர் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்,

நாமக்கல் மாவட்டம் செங்கரையில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் பள்ளி மாணவியர் விடுதி கட்டிடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் ரூ.2 கோடியே 92 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி கட்டிடம் என மொத்தம் ரூ.18 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி திறந்து வைத்தார்.

பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக தலைவர் மதிவாணன், தலைமைச்செயலாளர் இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர் சோ.மதுமதி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குனர் கே.விவேகானந்தன், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ச.அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story