மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் தண்ணீர் திறப்பு..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 April 2022 7:26 AM IST (Updated: 12 April 2022 7:26 AM IST)
t-max-icont-min-icon

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. மொத்தம் 71 அடி உயரம் கொண்டது. இந்த அணையில் நேற்றைய நீர்மட்டம் 68.54 அடி இருந்தது. ஆண்டுதோறும் மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

இந்த நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்காக வைகை அணையில் இருந்து நேற்று மாலை 6 மணி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தண்ணீர் வேகமாக ஆற்றில் செல்லும் வகையில் இரவில் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் வைகை அணையில் இருந்து நேற்று மாலை 6 மணிக்கு வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. வருகிற 16-ந்தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு 3 நாட்கள் முன்பு தான் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 5 நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Next Story