அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது..!! - பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது..!! - பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 April 2022 1:07 PM IST (Updated: 12 April 2022 2:07 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் பிரச்னையில் தேவையில்லாமல் அரசியலை புகுத்தி கட்சியை பலப்படுத்த பாஜக நினைத்தால் அது நடக்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

மக்கள் பிரச்னையில் தேவையில்லாமல் அரசியலை புகுத்தி தங்கள் கட்சியை பலப்படுத்த பாஜக நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று சட்டசபையில் பாஜகவினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.  

முன்னதாக மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபம் குறித்து தமிழக சட்டமன்றப் பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டு வந்தார். 

அதற்கு பதில் அளித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திலே இருக்கிறது. இன்று அதிலே தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். இருந்தாலும், நம்முடைய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மிக விளக்கமாக என்ன சொல்ல வேண்டுமோ, அவை அனைத்தையும் பதிலாக இங்கே தந்திருக்கிறார்கள். எனவே, நான் அதற்குள் அதிகம் செல்ல விரும்பவில்லை.

இருந்தாலும், பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த உறுப்பினருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். அது என்னவென்று கேட்டால், ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். இதுதான் என்னுடைய வேண்டுகோள். சாமானிய மக்கள் பாதிக்கிற வகையில், இன்றைக்கு பெட்ரோல் விலை, டீசல் விலை, அதேபோன்று, கேஸ் சிலிண்டர் விலை, இவையெல்லாம் உயர்ந்து கொண்டே போகிறது. அதைக் கட்டுப்படுத்துகிற முயற்சியிலே நீங்கள் ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், நம்முடைய மாநிலத்திற்கு வரவேண்டிய நிதியைப் பற்றி விளக்கமாக, விரிவாக சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களிடத்திலே, குறிப்பாக, இந்தியப் பிரதமரிடத்திலே நான் வலியுறுத்திவிட்டு வந்திருக்கிறேன். எனவே, அதற்கு நீங்கள் ஆதரவாக இருந்து, அதைப் பெறுவதற்கான முயற்சியிலே நீங்கள் ஈடுபட வேண்டும். நம்முடைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்து கொண்டு நீங்கள் நடக்க வேண்டும். எனவே, தேவையில்லாமல், இதிலே அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக நீங்கள், உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டும், வளப்படுத்த வேண்டுமென்று நினைத்தீர்களேயானால், அது நடக்கவே நடக்காது என்பதை நான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Next Story