பிறந்தநாள் கொண்டாட்டத்தில் புகுந்து பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை
கொருக்குப்பேட்டையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் வாலிபர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தனர்.
பெரம்பூர்,
கொருக்குப்பேட்டை பாரதி நகர் பிளாக் ஹவுசிங்போர்டில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகன் ரமேஷ்(வயது 20). சென்னை மண்ணடி பகுதியில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ஆனந்தன் என்பவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ரமேஷிடம் தகராறில் ஈடுபட்டு அவர்கள் கொண்டு வந்த இரும்பு கம்பியாலும், கட்டைகளாலும் பலமாகத் தாக்கி உள்ளனர். மேலும், ஆத்திரம் தாங்காமல் மயங்கி விழுந்த ரமேஷின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே ஆர்.கே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்த நிலையில், நேற்று அதிகாலை கொருக்குப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார், கொருக்குப்பேட்டை ரங்கநாதன் ரெயில்வே தண்டவாளம் அருகே பதுங்கியிருந்த கொருக்குப்பேட்டை பாரதி நகரைச் சேர்ந்த உதயகுமார் (30), கொருக்குப்பேட்டை சி.பிளாக்கை சேர்ந்த அரவிந்த் (21), வண்ணாரப்பேட்டை முத்தையா மேஸ்திரி தெருவைச் சேர்ந்த முஹம்மது ரசூலுல்லா (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், கைதான உதயகுமாரின் தம்பி ராஜேஷின் செல்போனை, கொலையான ரமேஷ் திருடியதாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த உதயகுமார் நண்பர்களுடன் சேர்ந்து ரமேஷை இரும்பு கம்பியால் தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கொருக்குப்பேட்டை போலீசார் 3 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சென்னை வேளச்சேரி எம்.ஜி.ஆர். நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த கல்பனா (36) என்பவரது வீட்டில் கடந்த 8-ந் தேதி புகுந்த மர்மநபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.
இச்சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், வீட்டில் புகுந்து கல்பனாவின் கழுத்தை அறுத்து செல்போனை திருட முயன்றதாக தட்சிணாமூர்த்தி (21) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story