அரசியலில் இருந்து யாரையும் விரட்ட முடியாது - சசிகலா பேட்டி


அரசியலில் இருந்து யாரையும் விரட்ட முடியாது - சசிகலா பேட்டி
x
தினத்தந்தி 12 April 2022 8:15 PM GMT (Updated: 12 April 2022 8:15 PM GMT)

அரசியலில் இருந்து யாரையும் விரட்ட முடியாது என்று சசிகலா கூறினார்.

சேலம்,

சசிகலா சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணமாக காரில் சென்றார். நேற்று முன்தினம் நாமக்கல், திருச்செங்கோடு, சேலம் சென்றார். 2-வது நாளான நேற்று தாரமங்கலம் சென்றார். அங்கு சசிகலா நிருபர்களிடம் கூறுகையில், “கொங்கு மண்டல மக்கள் மிகவும் மென்மையானவர்கள். அன்பாகவும், பாசமாகவும் பழகுகின்றனர். ஒருவர் அரசியலில் இருப்பதும், இல்லாமல் போவதும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கிற முடிவு. தனிப்பட்ட ஒருவர் அதனை கூற முடியாது. அரசியலில் இருந்து யாரையும் விரட்ட முடியாது என்றார்.

தொடர்ந்து சசிகலா மேச்சேரி சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் மேட்டூர் வழியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் சென்றார். அங்கு பத்ரகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்த சசிகலா பின்னர் சத்தி அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

போலீசாருடன் வாக்குவாதம்

முன்னதாக தாரமங்கலத்தில் சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க. கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தக் கூடாது என்று போலீசார் கூறினர். மேலும் தொண்டர்கள் கையில் இருந்த கொடியை வாங்க முயன்றனர். அதற்கு தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, போலீசாருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்படி இருந்தும் சசிகலா அங்கிருந்து செல்லும் வரை ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடியை பிடித்தபடி சசிகலாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக சசிகலா அ.தி.மு.க. கொடிகட்டிய காரில் கோவிலுக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story