ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை: சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு


ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை: சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
x
தினத்தந்தி 12 April 2022 11:25 PM GMT (Updated: 12 April 2022 11:25 PM GMT)

தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை பஸ் நிலையம் இடையே ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த பின்பு, புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

ரூ.485 கோடியில் உயர்மட்ட சாலை

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி. கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு மற்றும் சி.ஐ.டி. சாலை சந்திப்புகளை கடந்து சைதாப்பேட்டை பஸ் நிலையம் வரை ரூ.485 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். இதனால் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும்.

பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் குன்றத்தூர் சாலை சந்திப்பில் மேம்பாலம் ரூ.322 கோடி மதிப்பிலும், சென்னை உள்வட்ட சாலையில் பாடி மேம்பாலம் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் ரூ.100 கோடி மதிப்பில் இரு ஐந்து வழித்தடமாக அகலப்படுத்தப்படும். தாம்பரம் சண்முகம் சாலையை சென்னை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

சென்னை மாநகர பகுதியில் உள்வட்ட சாலையில், செந்தில் நகர் சந்திப்பு, டெம்பிள் பள்ளி சந்திப்பு, கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் ரூ.56 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள 308 உதவி பொறியாளர் பணியிடங்கள் இந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்

‘தினத்தந்தி’ தலையங்கம் பாராட்டு

பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களாகிய எங்களை பாராட்ட வேண்டாம் என்று சொன்னாலும், முதல்-அமைச்சரின் செயல்பாடுகளுக்காக இன்று அவரை ஜனநாயகமே பாராட்டுகிறதே. ஜனநாயகத்தின் நான்கு தூண்களும், அதாவது சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை, பத்திரிகைகள் உங்களை பாராட்டுகிறதே. சட்டமன்றத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் ஆகியோர் பாராட்டியுள்ளனர். அரசு நிர்வாகத்தை கவனித்தால், முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், ஆந்திர மாநில மந்திரி ரோஜா உள்ளிட்டோர் பாராட்டுகின்றனர்.

நீதித்துறையை எடுத்துக் கொண்டால், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பத்திரிகைத் துறையை எடுத்துக் கொண்டால், ‘தினத்தந்தி’ தலையங்கம் உள்ளிட்ட பல பத்திரிகைகளின் தலையங்கங்களில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. அவர் திராவிட தூணை அமைக்க நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறார். திராவிட மாடல் என்ற மக்களாட்சியை கட்டமைக்க அவர் 24 மணிநேரமும் உழைக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story