“ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெருக்கடி கொடுத்தால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” - சீமான் எச்சரிக்கை
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக அரசியல் ரீதியாகவோ, மத ரீதியாகவோ தனிநபர் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீமான் எச்சரித்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்றும் வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரி அமித்ஷா கூறியிருந்தார். மேலும் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தமிழணங்கு’ என்ற படத்தை பதிவிட்டார்.
அந்த படத்தில், “இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் வரிகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ் தான் இணைப்பு மொழி என்று ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்தார். இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தித்திணிப்புக்கு எதிரான கருத்தைக் கூறியதால் சகோதரர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!” என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ண் ஓட்டத்தையே ஏ.ஆர்.ரஹ்மான் தனது கருத்துக்களின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார் எனவும், ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று அமித்ஷா கூறிய கருத்துக்கு பதிலுரைக்கும் விதமாக தமிழை இணைப்பு மொழியாக கோரியதை தான் வழிமொழிவதாகவும் சீமான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மூத்த மொழியாகவும், உயர்தனிச்செம்மொழியாகவும் விளங்கும் தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என காயிதே மில்லத் தொடங்கி பலர் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்த நிலையில், இந்தியை புகுத்த துடிக்கும் மத்திய அரசின் செயலை வன்மையாக கண்டிப்பதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.
தமிழின் மீது மாறாப் பற்று கொண்டு திகழும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து என்பது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல, அது தாய்த்தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வின் பிரதிபலிப்பு என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தனிப்பட்ட நபரல்ல, உலகெங்கும் வேர் பரப்பி வாழும் தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் என்றும் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தித்திணிப்புக்கெதிரானக் கருத்தைக் கூறியதால் சகோதரர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!https://t.co/jwZUJGaamZpic.twitter.com/fyOoZaMas8
— சீமான் (@SeemanOfficial) April 13, 2022
Related Tags :
Next Story