சுற்றுலா தலங்களை இணைத்து பஸ் வசதி
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா தலங்களை இணைத்து பஸ்கள் விடப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
கடற்கரை கொண்ட அழகிய நகரம் புதுச்சேரி.
கடற்கரை திருவிழா
அரசு சுற்றுலாத்துறை சார்பில் புதுச்சேரியில் கடற்கரை திருவிழா 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா இன்று மாலை கடற்கரை சாலையில் உள்ள லேகபே அருகில் நடந்தது.
விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பலூன்களை பறக்க விட்டு கடற்கரை திருவிழாவை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரிதான புதுச்சேரி
புதுவையில் கடற்கரை திருவிழா நடத்துவது சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்லாமல் மீனவர் சகோதரர்களுக்கும் இது உதவுவதாக இருக்கும். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் புதுச்சேரியில் இருக்கிறது. அழகிய கடற்கரை, அழகிய மணற்பரப்பு, பாரம்பரிய கட்டிடங்கள், அழகிய கிராமங்கள், அழகிய கைவினைக் கலைஞர்கள் இவையெல்லாம் ஒரு மாநிலத்தில் இருப்பது என்பது அரிதான ஒன்று. இவை அனைத்தும் புதுச்சேரியில் இருக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்தி வருவதற்காக சுற்றுலா துறையை பாராட்டுகிறேன்.
இந்த கடற்கரை திருவிழாவிற்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மாணவ,– மாணவிகளுக்கு சுற்றுலா பெரிதும் பயன்படுகிறது. அதிகம் கற்றுக் கொடுக்கிறது.
லண்டனில் சுற்றுலா பேருந்தில் ஏறி உட்கார்ந்தால் லண்டன் நகரத்தையே சுற்றி காண்பிப்பது போல புதுச்சேரியிலும் அறிமுகப்படுத்தினால் புதுச்சேரி சுற்றுலா உலகம் முழுவதும் பரவும். மாநிலத்தின் வருவாயும் பெருகும்.
பாரதியாருக்கு சிலை
அன்மையில் பிரதமர் மோடியை சந்தித்த போது கடற்கரை திருவிழா குறித்து கூறினேன். அவர் தனது பாராட்டை தெரிவித்தார். மேலும் குஜராத்தில் பட்டேலுக்கு சிலை வைத்திருப்பதை கூறினார். அதன் மூலம் அதனை சுற்றியுள்ள ஏராளமான மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். எனவே நான் புதுச்சேரியில் பாரதியாருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எனது ஆவலைத் தெரிவித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரங்கசாமி
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
பொதுவாக திருவிழா என்பது மக்கள் மகிழ்ச்சியாக இருக்க கொண்டாடப்படுவதாகும். புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாதம் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது.
சில இடங்களில் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ஆற்று திருவிழா கொண்டாடப்படுகிறது. நாம் கடந்த மாதம் வணிக திருவிழா கொண்டாடினோம். இதன் மூலம் வணிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
புதுச்சேரி சுமார் 26 கி.மீ. கடற்கரை பகுதியை கொண்டது. இங்குள்ள கடற்கரை மிகுந்த அழகானது. சற்று சீற்றம் அதிகமாக இருக்கும். எனவே கடல் அலைகளை பார்த்து ரசிக்க மட்டும் தான் செய்ய வேண்டும். உள்ளே இறங்கி விளையாடி நினைத்தால் ஆபத்தானது.
இதனை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கடற்கரையில் வடக்கு, தெற்கு பகுதிகளில் சாலைகள் போட இருக்கிறோம். இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். அது முடிவடையும் போது புதுச்சேரி கடற்கரை மேலும் அழகு பெறும்.
சுற்றுலாதலங்களுக்கு பஸ்
புதுச்சேரியில் உள்ள மக்களும், சுற்றுலா வருபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கடற்கரை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் மேலும் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
புதுச்சேரியில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.
லண்டனில் இருப்பது போல புதுவையில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்துக்கும் சென்று வரும் வகையில் அரசு சார்பில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதை ஏற்று புதுவை சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்படும்.
உதவிகள்
இதேபோல் புதுவைக்கு சுற்றுலா வரும் பொதுமக்களுக்கு தங்குவதற்கு இட வசதி செய்து கொடுக்க வேண்டும். எனவே கடந்த ஆட்சி காலத்தில் ஓட்டல்கள் கட்டுவோருக்கு அரசு ரூ.1 கோடி மானியம் வழங்கியது. தற்போது கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தங்கும் விடுதிகள் கட்ட முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை இந்த அரசு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலைநிகழ்ச்சிகள்
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், அனிபால் கென்னடி, சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்சினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக படகோட்டி இசை நிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story