அரசு கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகள்


அரசு கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகள்
x
தினத்தந்தி 14 April 2022 2:33 AM IST (Updated: 14 April 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி, நரிக்குடி பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே பனைக்குடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பனைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வாணிப கிடங்கிற்கு ஏற்றிச்செல்ல லாரிகள் வரவில்லை.

இதனால் 3,500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் பனைக்குடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கிறது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து துர்நாற்றம் வீசி நெல் அனைத்தும் வீணாகி வருகிறது.

பெரும் நஷ்டம்

மேலும் வாணிப கழகத்திற்கு கொண்டு செல்லும் நெல்மூட்டைகள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலமாக மீண்டும் பொதுமக்களுக்கே வினியோகம் செய்யப்படும் சூழ்நிலையில் இவ்வாறு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகளால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே மாவட்ட நிர்வாகம் நரிக்குடி ஒன்றியம் மற்றும் காரியாபட்டி தாலுகாவில் செயல்படும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்மூட்டைகளை உடனடியாக வாணிப கழகத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story