தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்வு


தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்வு
x
தினத்தந்தி 13 April 2022 11:19 PM GMT (Updated: 2022-04-14T04:49:06+05:30)

தொடர் விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. விரும்பினால் ஏறு...இல்லாவிட்டால் நடையை கட்டு... என கூறியதால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சென்னை,

தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி அரசு விடுமுறை நாட்களும், அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதற்கு நேற்று பஸ், ரெயில் நிலையங்களில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால், பஸ், ரெயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

ஆம்னி பஸ்களில் வசூல் வேட்டை

இதுபோன்ற பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது.

அதேபோல தான், இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறையை பயன்படுத்தி, நேற்று கொள்ளை லாபத்தில் கட்டணத்தை உயர்த்தி ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், ரூ.2 ஆயிரத்துக்கு குறைந்து எந்த ஆம்னி பஸ்களிலும் டிக்கெட் விற்கப்படவில்லை எனவும் பல்வேறு தரப்பிலும் இருந்து புகார்கள் குவிந்தன.

ஆம்னி பஸ்களில் காலியாக இருக்கும் கடைசி இருக்கையாக இருந்தாலும் கூட அதற்கு ரூ.1,500 வரை டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. அந்தவகையில் ஆம்னி பஸ்களில், விமான கட்டணத்துக்கு நிகராக வசூல் வேட்டை நடத்தினர். இதனால் ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய வந்த பயணிகள் திக்குமுக்காடி போனார்கள். அவசரத்துக்கு ரெயிலில் பயணம் செய்யலாம் என்று நினைத்தால் கூட, முன்பதிவில்லா பெட்டிகள் இல்லாததால் வேறு வழி இல்லாமல், அரசு பஸ்களிலும், தனியார் ஆம்னி பஸ்களிலுமே பயணம் செய்தனர்.

ரூ.4 ஆயிரம் வரை...

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொண்ட தனியார் ஆம்னி பஸ்கள் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளதாக பயணிகள் குமுறுகின்றனர்.

அந்தவகையில் நேற்று தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்ய சென்ற பயணிகள், வழக்கமான கட்டணத்தை விட பலமடங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை டிக்கெட் விற்பனையானதை கண்ட பயணிகள் நெஞ்சை பிடித்துக்கொண்டு, ஏன் இவ்வளவு கட்டணம் உயர்த்தி உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த தனியார் ஆம்னி பஸ் நிர்வாகங்கள், விருப்பம் இருந்தால் ஏறுங்கள், இல்லையென்றால் நடையை கட்டுங்கள் என பதில் அளித்ததால், நொந்து போன பயணிகள், வேறு வழி இல்லாமல், அந்த பஸ்களில் பயணத்தை மேற்கொண்டனர்.

கட்டணம் திருப்பி ஒப்படைப்பு

இதற்கிடையில், ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து இணை கமிஷனர் ரவிசந்திரன் தலைமையிலான அதிகாரிகள், ஆம்னி பஸ் நிலையத்தில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆம்னி பஸ் நிலையத்தின் வாசலில் நின்று கொண்டு, வெளியே வரும் பஸ்களை மடக்கி நிறுத்தி, உள்ளே ஏறிய அதிகாரிகள், பயணிகளிடம் கூடுதலாக எவ்வளவு கட்டணம் வசூல் செய்துள்ளனர் என கேட்டு சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்ட பயணிகளுக்கு, கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும், கூடுதல் கட்டணம் வசூல் செய்த ஆம்னி பஸ்களின் விவரங்களை சேகரித்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Next Story