வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் ரூ.14 ஆயிரம் கள்ளநோட்டுகள்
வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் செலுத்தும் எந்திரத்தில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளாக ரூ.14 ஆயிரத்தை டெபாசிட் செய்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்குள்ள பணம் செலுத்தும் எந்திரத்தில் மொத்தம் 28 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளதாக வங்கி மேலாளர் லதா, நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்தது, பரங்கிமலையை சேர்ந்த எப்ஸி (வயது 28) என தெரியவந்தது. தனியார் கிரெடிட் கார்டு தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றும் எப்ஸியிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர், “வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணத்தை செலுத்த சென்றபோது, அங்கிருந்த மர்மநபர் ஒருவர், என்னிடம் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, அதனை எனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு, பின்னர் ஆன்-லைனில் அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கும்படி கூறினார். அதன்படி நானும், அந்த பணத்தை எனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்தேன். ஆனால் நான் செலுத்திய பணம் எனது வங்கி கணக்கில் வந்து சேராததால் அவருக்கு அனுப்பி வைக்கவில்லை. அவர் யார்? என்பதும் எனக்கு தெரியாது” என்று கூறினார்.
இதையடுத்து எப்ஸியிடம் கள்ளநோட்டுகளை கொடுத்து டெபாசிட் செய்ய சொன்ன மர்ம நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story