விசிக- பாஜக தொண்டர்கள் இடையே அடிதடி - 3 பேர் மண்டை உடைப்பு....!
சென்னை கோயம்பேட்டில் விசிக- பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
சென்னை,
சட்டமேதை அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அரசியல் கட்சி பிரமுகர்கள் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
அந்தவகையில், சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வருகை வந்தனர். அதேபோல, பாஜக கலைப்பிரிவு நிர்வாகி காயத்ரி ரகுராம் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்களும் வருகை தந்தனர்.
அப்போது அம்பேத்கர் சிலை அருகே இருந்த பாஜக கொடியை விசிகவினர் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாஜவுக்கும் விசிகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். உடனே அம்பேத்கர் சிலை மேடை மீது ஏறிய காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு விசிகவினருக்கும் முழக்கங்கள் எழுப்பினர்.
இரு தரப்பினரின் மோதலை முடிவுக்குக் கொண்டு வர போலீசார் முயற்சி செய்தனர். ஆனால், அதனையும் மீறி மோதல் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து, சென்னை இணை ஆணையர் ராஜேஸ்வரி மற்றும் அண்ணாநகர் துணை ஆணையர சிவ பிரசாத் ஆகியோர் விசிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இணை ஆணையர் ராஜேஸ்வரி விசிக கட்சி தலைவர் திருமாவளவனுடன் போனில் பேசியதை அடுத்து விசிகவினர் கலைந்து சென்றனர்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த விசிக- பாஜக இடையே மோதல் ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story