ஆறாம் வகுப்பு கணிதப்புத்தக்கத்தில் ரம்மியை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடம் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு


ஆறாம் வகுப்பு கணிதப்புத்தக்கத்தில் ரம்மியை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடம் - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 April 2022 5:27 PM IST (Updated: 14 April 2022 5:27 PM IST)
t-max-icont-min-icon

ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தில் சீட்டுக் கட்டுகளைக் கொண்டு ரம்மி ஆட்டத்தை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தில் சீட்டுக்கட்டுகளைக் கொண்டு ரம்மி ஆட்டத்தை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மாணவர்களை சீரழித்து விடும்.

முழுக்கள் என்ற பாடத்தின் நோக்கம் எண்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதாக இருக்கலாம். ஆனால், அதற்கு நல்ல உதாரணங்கள் இருக்கும் நிலையில், ரம்மி ஆட்டத்தை எடுத்துக்காட்டாக வைத்திருப்பது தவறு. இது மாணவர்களுக்கு எண்களை கற்றுத்தராது; ரம்மியைத் தான் கற்றுத் தரும்.

ஆன்லைன் ரம்மி ஆட்டம் இளைய சமுதாயத்தை சீரழித்து தற்கொலைக்கும், கொலைகளுக்கும் வழி வகுத்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த பாடம் சீரழிவை மேலும் அதிகரிக்கச் செய்யும். மானவர்களுக்கு நன்மையை போதிக்க வேண்டிய பாடநூல்கள் தீமையை போதிக்கக்கூடாது.

ரம்மியை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடத்தை மாற்றியமைத்தால் மட்டும் போதாது. சீட்டுக்கட்டுகளுடன் கூடிய அந்த பாடம் மாணவர்களின் கண்களில் படக்கூடாது. அதற்காக இப்போது வரும் கல்வியாண்டுக்கு அந்த பாடம் இல்லாத புதிய பாடநூல்களை அச்சிட்டு வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story