பள்ளியில் மதமாற்ற புகார் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
கன்னியாகுமரியில் மாணவி ஒருவர் தனது ஆசிரியை மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாக குற்றஞ்சாட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை,
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் இந்து மத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசியதாகவும் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை செய்ய வற்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவலளித்து அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். தலைமை ஆசிரியர் முன் போலீசார், மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தையல் ஆசிரியை பியாட்ரிஸ் தங்கத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தையல் ஆசிரியை பியாட்ரிஸ் தங்கத்திடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது, இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், இந்த சம்பவத்தில் முதற்கட்ட நடவடிக்கையாக அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் மூலமாக தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
நாம் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதை முழுமையாக நம்பக்கூடியவர்கள். எனவே, இந்த குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் வகையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைக்கு பிறகு அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
Related Tags :
Next Story