ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா


ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
x
தினத்தந்தி 15 April 2022 12:38 AM IST (Updated: 15 April 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று அதிகாலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

திருவாரூர்,

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் அமைந்து உள்ளது. ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

குருப்பெயர்ச்சி விழா

இந்த ஆண்டு குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீனராசிக்கு நேற்று அதிகாலை 4.16 மணிக்கு பெயர்ச்சியடைந்தார். இதனை முன்னிட்டு இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடந்தது. குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

குருபகவான் தங்ககவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் குருபகவான் சன்னதிக்கு எதிரில் தங்ககவச அலங்காரத்தில் உற்சவர் தெட்சிணாமூர்த்தி எழுந்தருளினார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் வந்து குவிந்தனர். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்தனர். குருப்பெயர்ச்சியையொட்டி 2-வது கட்ட லட்சார்ச்சனை வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்

தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story