லாரி மோதி 2 வயது குழந்தையுடன் பெண் போலீஸ் பலி


லாரி மோதி 2 வயது குழந்தையுடன் பெண் போலீஸ் பலி
x
தினத்தந்தி 15 April 2022 2:50 AM IST (Updated: 15 April 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் 2 வயது குழந்தையுடன் பெண் போலீஸ் பலியானார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.

சென்னை,

காஞ்சீபுரத்தை அடுத்த பனப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் உமாதேவி (வயது 26). இவர், சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து விட்டு மொபட்டில் கணவர் ராஜா மற்றும் 2 வயது மகன் தக்சீத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். மொபட்டை ராஜா ஓட்டினார். குழந்தையுடன் உமாதேவி பின்னால் அமர்ந்து இருந்தார்.

சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டிசத்திரம் அருகே செல்லும்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று, 2 கார்கள் மீது மோதியதுடன் அதற்குள் முன்னால் சென்று கொண்டிருந்த இவர்களது மொபட்டின் மீதும் மோதியது.

குழந்தையுடன் பெண் போலீஸ் பலி

இதில் பெண் போலீஸ் உமாதேவி மற்றும் அவரது மகன் தக்சீத் இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராஜா படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார் ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான இருவரின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை கைப்பற்றி, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story