மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்


மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 15 April 2022 3:47 AM IST (Updated: 15 April 2022 3:47 AM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்ததில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

கடந்த 11 மாத கால தி.மு.க. ஆட்சியில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாமை, ஆன்-லைனில் பதிவு செய்பவர்களிடம் மட்டும் தான் கொள்முதல் செய்யப்படும் என்ற கெடுபிடி, மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 ரூபாய் வரை கமிஷன் என்ற பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன.

கடந்த 10 நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்திருந்தும், நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை கால கன மழையின் காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளன.

விவசாயிகள் தவிப்பு

கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்காததால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு மக்களின் வரிப்பணம் வீணாவது இந்த விடியா ஆட்சியில் தொடர்கதையாகி வருகிறது. எனவே, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல், வேளாண் துறையில் சாகுபடி பரப்பை முறையாகவும், துல்லியமாகவும் கணக்கெடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் வருகின்றன. குறிப்பிட்ட விவசாயிகளிடம் இருந்து மட்டும் நெல் கொள்முதல் செய்யப்படுவதால், பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை அரசுக்கு அளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

உடனடி நிவாரணம்

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்துள்ள பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்கிட வேண்டும். நெல் சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளிடம் இருந்து கால தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும். மழையால் பாதிப்படைந்த சேதங்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story