132-வது பிறந்தநாள்: அம்பேத்கர் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை


132-வது பிறந்தநாள்: அம்பேத்கர் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 15 April 2022 5:42 AM IST (Updated: 15 April 2022 5:42 AM IST)
t-max-icont-min-icon

அம்பேத்கர் 132-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

‘‘அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந்தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும். அம்பேத்கரின் பிறந்த நாளன்று தமிழகம் முழுவதும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்படும். அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்படும்’’, என்று தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்தநிலையில் அம்பேத்கர் 132-வது பிறந்தநாள் நேற்று சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் அம்பேத்கரின் உருவப்படம் மற்றும் மார்பளவு சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அம்பேத்கர் உருவப்படம் மற்றும் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அமைச்சர்கள் எ.வ.வேலு, க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், எம்.பி.க்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் ஜெயசீலன் ஆகியோரும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, முகமது ஷாநவாஸ், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அம்பேத்கர் மணிமண்டபத்துக்குள் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் மணிமண்டப வளாகத்தில் ஒளிபரப்பப்பட்ட அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படத்தை பார்த்தார்.

முழு உருவச்சிலை ஒப்படைப்பு

அப்போது மணிமண்டபத்தில் நிறுவுவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 9 அடி உயர அம்பேத்கரின் வெண்கல சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தொல்.திருமாவளவன் ஒப்படைத்தார். அந்த சிலை முன்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

புரட்சி பாரதம் கட்சி தலைவர் எம்.ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., தமிழக காங்கிரஸ் ஆர்.டி.ஐ. பிரிவு துணைத்தலைவர் மயிலை தரணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அமிர்தவர்ஷிணி, சுபாஷினி, தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, திராவிடர் விடுதலை கழக செயலாளர் உமாபதி, சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் உள்பட பலரும் அம்பேத்கர் உருவப்படம்-சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story