கார் டயர் வெடித்து விபத்து: கள்ளக்குறிச்சி துணை கலெக்டர் உயிரிழப்பு...!
கார் டயர் வெடித்து விபத்தில் கள்ளக்குறிச்சி துணை கலெக்டர் உயிரிழந்து உள்ளார்.
சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்ட தனி துணை கலெக்டராக இருந்தவர் ராஜாமணி (வயது 50). இவர் குடும்பத்துடன் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. நகரில் வசித்து வந்தார். இன்று ராஜாமணி தனது குடும்பத்தினருடன் திருவரங்கம் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை ராஜாமணி தனது கணவர் சுந்தரம் (58), மகள் சிந்து(24), மகன் விக்ரம்(21) மற்றும் எதிர் வீட்டில் வசித்து வரும் துரைசாமி மனைவி பழனியம்மாள் (60) ஆகியோருடன் காரில் கள்ளக்குறிச்சியில் இருந்து திருவரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காரை கள்ளக்குறிச்சியை சேர்ந்த நசீம் பாரூக்(31) என்பவர் ஓட்டினார். சங்கராபுரம் தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது காரின் பின்பக்க டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி, முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்(22), கிரிஜா(20) ஆகியோர் மீது மோதியது.
தொடர்ந்து அங்குள்ள நிழற்குடை அருகே காய்கறி வாங்கி கொண்டிருந்த கோவிந்தன் மகள் கோபிகா(11) மீது மோதி விட்டு, மின் கம்பத்தில் மோதி நின்றது.
இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த ராஜாமணியும், கார் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமி கோபிகாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த சுந்தரம், விக்ரம், சிந்து, பழனியம்மாள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த நெடுமானூரை சேர்ந்த விக்னேஷ், கிரிஜா ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story