மதுரை வந்தார் கள்ளழகர்: தல்லாகுளத்தில் கள்ளழகரை எதிர்சேவையாக மக்கள் எதிர்கொண்டு வரவேற்பு
நாளை காலை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக கள்ளர் கோலத்தில் அழகர் மதுரைக்கு வருகைபுரிந்தார்.
மதுரை,
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, நாளை நடைபெற உள்ளது. இதற்காக அழகர் மலையில் இருந்து கள்ளர் திருக்கோலத்தில் அழகர் நேற்று மதுரை நோக்கி புறப்பட்டார்.
மதுரை வரும் வழியில் பொய்கைகரைபட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, உள்ளிட்ட பல மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். முன்னதாக பக்தர்கள் நெல் உள்ளிட்ட தானிய வகைகளை காணிக்கையாக செலுத்தினர்.
இந்த நிலையில், தற்போது கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். மதுரை, தல்லாகுளத்தில் கள்ளழகரை எதிர்சேவையாக மக்கள் எதிர்கொண்டு வரவேற்று வணங்கினர். கள்ளகர் வருகையால், தல்லாகுளத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தங்குகிறார்.
இதையடுத்து நாளை காலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, நாளை அதிகாலையில் 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அழகர் மதுரை வருவதால் வழி நெடுகிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Related Tags :
Next Story