ரூ.30 லட்சத்துக்கு விற்க முயன்ற நடராஜர் சிலை மீட்பு


ரூ.30 லட்சத்துக்கு விற்க முயன்ற நடராஜர் சிலை மீட்பு
x
தினத்தந்தி 16 April 2022 1:55 AM IST (Updated: 16 April 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

ரூ.30 லட்சத்துக்கு விற்க முயன்ற நடராஜர் உலோக சிலையை போலீசார் மீட்டதுடன் இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாரியம்மன் கோவில் பைபாஸ் சாலையில் கும்பகோணம் சாலை சந்திப்பில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது பைபாஸ் சாலையின் கீழ்புறத்தில் நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா ராஜகிரி கரைமேடு பகுதியை சேர்ந்த கேசவன் மகன் பிரபாகரன்(வயது 27), அதே பகுதியை சேர்ந்த அல்லாபக்ஸ் மகன் பைசல் அகமது(27), சக்காரப்பள்ளி எஸ்.தோட்டம் பகுதியை சேர்ந்த சுலைமான்பாட்சா மகன் சாகுல்அமீது(26) என்பது தெரிய வந்தது.

நடராஜர் உலோக சிலை

மேலும் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததோடு, முகவரியையும் மாற்றி தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் வைத்திருந்த உடைமையை சோதனை செய்தபோது அதில் நடராஜர் உலோக சிலை இருந்தது.

அந்த சிலை பூதத்தின் மேல் வலதுகாலை வைத்தும், இடது காலை வலப்பக்கம் தூக்கிய நிலையில் திருவாச்சியில் 21 சுடருடன் அதில் 13-வது சுடர் அறுத்து எடுக்கப்பட்ட நிலையில் சுமார் ¾ அடி உயரமும், 1 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

மேலும் அந்த சிலையை ரூ.30 லட்சத்துக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சிலையை மீட்டதுடன் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story