தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு உணவுப்பொருட்கள்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு உணவுப்பொருட்கள்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 April 2022 2:33 AM IST (Updated: 16 April 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விரைந்து அனுப்புவதற்கு வசதியை செய்துதர வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அத்தியாவசிய பொருட்கள்

கடந்த 31.3.2022 அன்று பிரதமரை சந்தித்த போது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசு வழங்கத் தயாராக உள்ளது என கூறினேன்.

மேலும் கடந்த 7.4.2022 அன்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரியுடனான தொலைபேசி உரையாடலின் போது, பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கை தமிழர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருப்பதை தெரிவித்த போது, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துடன் உரிய ஆலோசனை செய்து, அதற்கு பிறகு இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கலாம் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வசதியை செய்து தர வேண்டும்

உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

இந்த தருணத்தில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும், தோட்டங்களில் பணிபுரிந்து வருவோருக்கும் அனுப்புவதற்கு தமிழ்நாடு அரசு உறுதியோடு உள்ளது.

இலங்கையில் நிலவும் இத்தகைய மோசமான நிலையை கருத்தில் கொண்டு, விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தரவேண்டும்.

சிறையில் மீனவர்கள்

அதேபோல், கடந்த 23.3.2022 அன்று கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களின் துயரநிலை குறித்து தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். மீனவர்கள் கைது தொடர்பான வழக்கினை விசாரித்த கிளிநொச்சி நீதிமன்றம், பிணையில் செல்ல ஒரு மீனவருக்கு இலங்கை ரூபாயில் ரூ.2 கோடி செலுத்திவிட்டு, தனிப்பட்ட பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

மீனவர்களால் அவ்வளவு பெரிய பிணைத் தொகையை செலுத்த இயலாத காரணத்தினால் 12.5.2022 வரை அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி உடனடியாக தலையிட்டு, சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு தேவையான சட்டப்பூர்வ உதவிகளை உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story