சென்னை திருவல்லிக்கேணியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து


சென்னை திருவல்லிக்கேணியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
x
தினத்தந்தி 16 April 2022 2:46 AM IST (Updated: 16 April 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

திருவல்லிக்கேணியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி ரோட்டேரி நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது மீரான் (வயது 30). இவர் தனது மனைவி அஸ்மத் (25), தந்தை காஜா மொய்தீன் (70) ஆகியோருடன் அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

முகமது மீரான் அவருடைய தந்தையுடன் சேர்ந்து சுயதொழில் செய்து வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று வணிக பயன்பாட்டிற்காக வீட்டிலேயே ஒரு கேஸ் சிலிண்டரில் இருந்து மற்றொரு கேஸ் சிலிண்டருக்கு எரிவாயுவை மாற்ற முயன்றபோது எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிய தொடங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முகமது மீரானின் உடலிலும் தீ பற்றியதுடன், வீட்டிலும் தீ பரவ தொடங்கியது. வீட்டில் உள்ள ஏ.சி போன்ற எலக்ட்ரானிக் பொருட்களிலும் தீ பிடித்து எரிந்தது. இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு அங்குமிங்குமாக ஓடினர்.

இவர்களது அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து, தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே முகமது மீரான் உடல் கருகி உயிரிழந்தார்.

4 பேர் படுகாயம்

இந்தநிலையில் தீ விபத்தில் படுகாயம் அடைந்த முகமது மீரானின் தந்தை காஜா மொய்தீன், மனைவி அஸ்மத், சகோதரன் இஸ்மாயிலின் மனைவி பாத்திமா (32), முகமது மீரானிடம் வேலை பார்க்கும், டிரைவர் தினேஷ் (30) ஆகியோரை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் முதலுதவி முடிந்த நிலையில் காயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story