இலங்கை தமிழர்களிடம் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாடினார்


இலங்கை தமிழர்களிடம் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாடினார்
x
தினத்தந்தி 16 April 2022 4:57 AM IST (Updated: 16 April 2022 4:57 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாடி அவர்களது தேவைகள், நலன் குறித்து விசாரித்தார்.

சென்னை,

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைத்தமிழர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டை நோக்கி கடல்மார்க்கமாக வரத்தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் பேரில் அவ்வாறு வரும் இலங்கை தமிழர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

13 குடும்பங்களை சார்ந்த 39 இலங்கை தமிழர்கள் கடல் வழியாக தமிழ்நாடு வந்துள்ளனர். இவர்களில் 11 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் ஒரு கை குழந்தை உள்பட 17 குழந்தைகள் உள்ளார்கள். மண்டபம் முகாமில் உள்ள அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உணவும் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே ராமநாதபுரம் மற்றும் திருச்சி உள்பட தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் 19 ஆயிரத்து 223 இலங்கை தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 547 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நலன் குறித்து விசாரித்தார்

இந்த நிலையில் தற்போது தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களுடன் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர்களது அத்தியாவசியத் தேவை மற்றும் நலன் குறித்தும் விசாரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் டி.ஐகந்தாதன், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ், ராமநாதபுரம் கலெக்டர் சங்கர் லால் குமாவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story